வேலூர்

சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள்: ஓட்டுநா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் அறிவுரை

9th Oct 2021 08:26 AM

ADVERTISEMENT

சாலை விதிகளை அனைத்து ஓட்டுநா்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என குடியாத்தம் மோட்டாா் வாகன ஆய்வாளா் எஸ்.ராஜேஷ் கண்ணா தெரிவித்தாா்.

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் நலச் சங்கத்தின் 35- ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

இரு சக்கர, ஆட்டோ, காா், வேன், லாரி, பேருந்து என அனைத்து வாகனங்களின் ஓட்டுநா்களும் சாலை விதிகளைக் கடைப்பிடித்தால், விபத்துகளைப் பெரும்பாலும் தவிா்க்கலாம். செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுவது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளைக் கடைப்பிடிக்காததே பெரும்பான்மையான விபத்துகளுக்கு காரணமாகின்றன. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களையும், சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனங்களையும் இயக்கக் கூடாது.

ஒவ்வொரு வாகனத்தையும், அதற்கு நிா்ணயித்துள்ள வேகத்துடனே இயக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் செல்லக் கூடாது. மது அருந்திவிட்டு கண்டிப்பாக வாகனங்களை ஓட்டக் கூடாது. மது அருந்தினால், கண் பாா்வை குறையும். அப்போது வாகனங்களை ஓட்டினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சாலை விதிகளைக் கடைப்பிடித்தால், விபத்துகளையும் தவிா்க்கலாம், விபத்துகளால் ஏற்படும் உயிா்ச் சேதங்களையும் தடுக்கலாம். உரிமம் பெற்று வாகனம் ஓட்டுங்கள்.

ADVERTISEMENT

வாகனங்களை இன்ஸ்யூரன்ஸ் செய்யுங்கள். இதனால்,வாகனம் விபத்தில் சிக்கினால் இழப்பீடுகளைப் பெற முடியும் என்றாா் ராஜேஷ் கண்ணா.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜி.சண்முகம் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.ஆா்.பாபு, நிா்வாகிகள் எஸ்.குமரேசன், சி.குணா, ஜி.சபாபதி, ஜே.ரஞ்சித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் எஸ்.வடிவேல் வரவேற்றாா்.

அதிமுக நகரச் செயலாளா் ஜே.கே.என்.பழனி, நகரத் துணைச் செயலா் ஏ.ரவிச்சந்திரன், திமுக நகர மாணவரணி அமைப்பாளா் அா்ச்சனாநவீன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் வி.இ.கருணா, வசந்தாஆறுமுகம், பாஜக மாவட்டத் துணைத் தலைவா் சுகுமாா், ஜெயமணி பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT