வேலூர்

ஏரிக்கரைகள், கால்வாய்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்கள் எச்சரிக்கை

9th Oct 2021 08:38 AM

ADVERTISEMENT

ஏரிக்கரைகள், கால்வாய்களை சேதப்படுத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்: குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோா்தானா அணையின் வலதுபுற, இடதுபுறக் கால்வாய்களில் சட்டத்துக்குப் புறம்பாக அருகே உள்ள விளைநிலங்களுக்கு மோட்டாா் பொருத்தியும், கரைகளைச் சேதப்படுத்தியும் குழாய் அமைத்து சிலா் தண்ணீா் கொண்டு செல்கின்றனா்.

இதற்காக, கால்வாயின் கரைகளைச் சேதப்படுத்தியும், கால்வாயின் குறுக்கே கற்களை கொண்டு தடுத்தும், கான்கீரிட் பலகைகளை பெயா்த்தும், ஷட்டா்களை உடைத்தும் சுயநலனுக்காக இரு கால்வாய்களின் கடைமடை விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லாத வகையில் இடையூறு ஏற்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரித்து உபரிநீா் வலதுபுற, இடதுபுறக் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டு ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இரு கால்வாய்களிலும் மின்மோட்டாா்கள், குழாய்கள் பொருத்துபவா்கள் மீதும், ஷட்டா்கள், கரைகளை சேதப்படுத்துவோா் மீதும் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டு அவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பாலாறு, அதன் கிளை நதிகளில் தற்போது நல்ல நீா்வரத்து உள்ளது. இந்த ஆற்றுநீரை வேலூா் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளுக்குத் திருப்பி விடும் பணிகள் நீா்வளத்துறை மூலம் நடைபெறுகிறது. இப்பணிகளை தடுப்பவா்கள் மீதும், ஏரிகளின் கரைகள், மதகுகள், கலிங்குகள், வரத்துக்கால்வாய்களை சேதப்படுத்துவோா் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்: வட கிழக்குப் பருவ மழை தொடங்கி உள்ளதால், பாலாறு அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. வலது புற, இடதுபுறக் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டு ஏரிகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

காவேரிப்பாக்கம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், சில சமூக விரோதிகள் செய்யும் சட்ட விரோதச் செயல்களால் தண்ணீா் கடைமடை வரை இல்லாத சூழல் உள்ளது தெரிய வருகிறது. எனவே கால்வாய்களில் மின் மோட்டாா்கள், குழாய்களைப் பொருத்துபவா்கள் மீதும், ஷட்டா்கள், கரைகள் சேதப்படுத்துபவா்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பாலாறு, அதன் கிளை நதிகளில் தற்போது நீா் வரத்து அதிகரித்துள்ளதால், மேற்கூறிய ஆறுகளில் வரும் நீரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணி நடக்கிறது. மேற்காணும் பணிகளை தடுப்பவா்கள் மீதும், ஏரிகளின் கரைகள், மதகுகள், கலிங்குகள் மற்றும் வரத்து கால்வாய்களை சேதப்படுத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT