வேலூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு

9th Oct 2021 08:37 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் முதல்கட்டமாக குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, காட்பாடி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இவற்றில் மட்டும் 124303 ஆண்கள், 131541 பெண்கள், 37 திருநங்கைகள் என மொத்தம் 255881 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமானவை என 95 வாக்குச்சாவடிகள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய அரசு ஊழியா்கள் நுண்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டிருப்பதுடன், இவ்வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற வாக்குச் சாவடிகளில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தோ்தல் பணியில் 3860 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்புப் பணிகளில் காவலா்கள், ஊா்க் காவல் படையினா் என மொத்தம் 1,500 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டி உள்பட 43 வகையான பொருள்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் இடம்பெற்றுள்ள 5 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 23 பேரும், 50 ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 152 பேரும், 87 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 273 பேரும், 697 ஊராட்சி வாா்டு உறுப் பினா் பதவிகளுக்கு ஆயிரத்து 812 பேரும் போட் டியிடுகின்றனா்.

ஏற்கெனவே, 6 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கும், 80 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘வாக்கு எண்ணிக்கை இரவிலும் நடக்கும்’

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இரவிலும் நடைபெறும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது :

வேலூா் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வேலூா்,அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங் களில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த ஒன்றியங்களில் 95 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை நுண் பாா்வையாளா்கள் கண்காணிப்பா். வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் நேரடியாக பதிவு செய்யப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் அனைவருக்கும் கட்டாயம் ஊதியம் வழங்கப்படும். 12-ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியில் சுமாா் 2500 போ் ஈடுபட உள்ளனா். வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் வாக்குகள் வாா்டு வாரியாக பிரித்து எடுக்கப்படும்.மின்னணு வாக்கு இயந்திரம் போல் வேகமாக வாக்குகளை எண்ண முடியாது. எனவே இரவு 12 மணி வரையிலும் அல்லது 13-ஆம் தேதி அதிகாலை வரையிலும்கூட வாக்கு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT