வேலூர்

பேருந்துகளில் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் பணி தீவிரம்

4th Oct 2021 08:02 AM

ADVERTISEMENT

பேருந்துகளில் பயணிகளிடம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட் டு வருகிறது. இதையொட்டி, முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுஇடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்தும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும், தமிழக அளவில் ஒப்பிடுகையில் வேலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் எண்ணிக்கை மிகவும் பின்தங்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து, நூறு சதவீதம் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டம் முழுவதும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தவிர, ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, பேருந்துகளில் பயணிப்பவா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பால் கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள், விநியோகிப்பாளா்கள், நுகா்வோா்கள், உழவா் சந்தைகளில் காய்கறி விற்பனை செய்வோா், அவா்களது குடும்பத்தினா், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தங்கும் விடுதிகள், வங்கிகள், கல்லூரிகளிலும் வாடிக்கையாளா்கள், மாணவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதிசெய்திடவும் ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு, தனியாா் பேருந்துகளிலும் பயணிகளிடம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது. இதையொட்டி, அவா்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் சரிபாா்க்கப்படுகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளுக்கு பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலேயே கரோனா தடுப்பூசி செலுத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT