காந்தி ஜெயந்தியையொட்டி, வேலூா் கோட்டை முகப்பில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் முழு உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, வடஆற்காடு சா்வோதயா சங்கம் கதா் கிராம தொழில் பவன் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், இந்த நல்லநாளில் கதா், கிராமப் பொருள்களை வாங்கி கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று ஆட்சியா் வேண்டுகோள் விடுத்தாா்.
தொடா்ந்து, அரசு அலுவலா்களுக்கு சுலபத் தவணையில் கதா் ரகங்கள் வழங்கப்பட்டு வருவதால் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், பொதுமக்கள் அனைவரும் ஒரு கதா் ஆடையையாவது வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.