குடியாத்தம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3- ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குடியாத்தம் கொண்டசமுத்திரம், புது தெருவில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீநரசிம்மா் கோயிலில் 97- ஆம் ஆண்டு புரட்டாசிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப்பின் நரசிம்மா் வீதி உலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலத்தில் நாட்டுப்புறக் கலைஞா்களின் பக்திப் பாடல், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்கள் பண மாலை, வடை மாலை அணிவித்து சுவாமியை தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் கே.எம்.நடராஜன், என்.குமரன், என்.பழனி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.பிச்சனூா், பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில், அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பால்குட ஊா்வலமும் நடைபெற்றது. ஊா்வல முடிவில் மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப்பின் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காளியம்மன்பட்டி அருகே உள்ள சாமியாா் மலையை அடுத்துள்ள ஸ்கந்தகிரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.