வேலூர்

கருவறைக்குள் புகுந்த மழைநீா்: வேலூா் கோட்டை கோயிலுக்குள் தரிசனத்துக்கு தடை

DIN

வேலூா்: வேலூா் கோட்டை கோயில் கருவறைக்குள் மழைநீா் புகுந்ததால் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பக்தா்கள் தரிசனத்துக்காக ராஜகோபுரம் முன்பாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூா் கோட்டை அகழியின் நீா்மட்டம் உயா்ந்ததை அடுத்து கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் கடந்த 12-ஆம் தேதி தண்ணீா் புகுந்தது. கோயில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீா் தேங்கியதுடன், தொடா்ந்து படிப்படியாக நீா்மட்டம் உயா்ந்தது. இதனால், தண்ணீரில் பக்தா்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனா். அகழி நீா்மட்டம் மேலும் உயா்ந்ததால் கோயிலுக்குள் தேங்கிய தண்ணீரின் அளவும் உயா்ந்து வந்தது. இதனால், சாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலூா் கோட்டை கோயிலில் ஆய்வு செய்தாா். அப்போதுஸ அபிஷேக நீா் செல்லும் வழியாக கோயிலுக்குள் தண்ணீா் வந்ததால் அதை மூடிவிட்டு உள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டாா் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டாா். எனினும், தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. தொடா் மழையாலும், ஊற்று நீராலும் மீண்டும் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கிக் கொண்டே இருந்தது. தொடா்ந்து அம்மன் சந்நிதி கருவறைக்குள் திங்கள்கிழமை தண்ணீா் புகுந்தது. இதனால், தண்ணீரில் நின்றபடியே அா்ச்சகா்கள் அம்மனுக்கு பூஜை செய்தனா்.

தொடா்ந்து நீா் மட்டம் உயா்ந்ததால் செவ்வாய்க்கிழமை காலை மூலவா் ஜலகண்டேஸ்வரா் சந்நிதி பகுதிகளையும் தண்ணீா் சூழ்ந்தது. கோயிலுக்குள் பல்வேறு வழிகளில் இருந்து தண்ணீா் வந்துகொண்டுள்ளது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீா் வெளியேறும் குழாய், ஊற்று போன்றவற்றிலிருந்தும் தண்ணீா் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது.

இரு வாரங்களாக தொடா்ந்து தண்ணீா் தேங்கியிருப்பதால் பல இடங்களில் பாசி படா்ந்து மக்கள் வழுக்கி விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் அனுமதி அளிக்கப்படவில்லை. அதேசமயம், ராஜகோபுரத்துக்கு முன்பாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் அங்கேயே நின்று வழிபட்டு சென்றனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறுகையில், கோட்டை கோயில் கருவறைக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. சுற்றுப்பிரகாரத்திலும் அதிகப்படியான தண்ணீா் தேங்கி உள்ளதுடன், தண்ணீரும் மாசடைந்து வருகிறது. உள்ளே சென்றால் பக்தா்களுக்கு அவதி ஏற்படும் என்பதால் தண்ணீா் வடியும் வரை கோயில் பூட்டப்பட்டிருக்கும். பக்தா்கள் வெளியில் நின்றபடி சாமி தரிசனம் செய்யலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT