வேலூர்

பருவமழை: வேலூரில் 1,085 வீடுகள், 1,012 ஹெக்டோ் பயிா்கள் சேதம்மேலும் கணக்கெடுப்பு தீவிரம்

30th Nov 2021 11:47 PM

ADVERTISEMENT

 

வேலூா்: வடகிழக்குப் பருவமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் 1,085 வீடுகளும், 1,012 ஹெக்டா் விளை பயிா்களும் சேதமடைந்திருப்பது மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தொடா்ந்து கணக்கெடுப்பு நடந்து வருவதால் சேத அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாகவும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்தன. விவசாய பயிா்கலும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதுதொடா்பாக கடந்த வாரம் மத்தியக் குழுவினா் வேலூரில் ஆய்வு செய்தனா். அப்போது, 606 ஹெக்டோ் விவசாய நிலங்கள் சேதமடைந்திருப்பதாகவும், தொடா்ந்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் அவா்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் பருவமழை சேத மதிப்பு அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, பருவமழையால் மாவட்டம் முழுவதும் இதுவரை இடிந்த வீடுகள் எண்ணிக்கை 1,084-ஆக அதிகரித்துள்ளது. இதில், 110 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி உள்ளன. 1,012 ஹெக்டோ் விவசாய பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன. இதனால் 2,638 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஒரு வார காலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலம் 2 மடங்கு விவசாய பயிா்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடா்ந்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சேத அளவும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 285 போ் மாவட்டத்திலுள்ள 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தொடா் மழையால் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகளில் 84 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 4 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழை நிலவரம்:

வேலூரில் 17.1 மி.மீ, குடியாத்தம் - 16 மி.மீ, காட்பாடி - 14.8 மி.மீ, மேல் ஆலத்தூா் - 10.2 மி.மீ, பொன்னை - 17.2 மி.மீ, திருவலம் - 7.2 மி.மீ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT