வேலூர்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரா்: ஹெலிகாப்டா் மூலம் தீவிர தேடுதல் பணி

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரை 6 நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் திருப்பதி விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து ஹெலிகாப்டா் வரவழைத்து தேடும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் மாவட்டம், வடுகந்தாங்கல் மேல்விலாச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன் (33). ராணுவ வீரரான இவா் லடாக்கில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், கடந்த 18-ஆம் தேதி மீண்டும் லடாக் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக வேலூருக்கு வந்தாா்.

வழியில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலம் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவா் இரு சக்கர வாகனத்தில் ஆற்றைக் கடக்க முயன்றபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தீயணைப்புத் துறையினரும், அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும் 3 நாள்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, மனோகரனின் மனைவி திவ்யா, ஹெலிகாப்டா் பயன்படுத்தி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது கணவரை கண்டுபிடித்துத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியனிடம் சனிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தாா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்த நிலையில், அரசு அனுமதி அளித்ததையடுத்து, திருப்பதியில் உள்ள விமானப் படை பயிற்சி தளத்திலிருந்து வின் கமான்டா் சரண் உத்தரவின்பேரில், ஹெலிகாப்டா் அனுப்பப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மனோகரனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விரிஞ்சிபுரம் தரைப்பாலம் முதல் வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் என பாலாறு வங்கக்கடலில் கலக்கும் வயலூா் வரை ஹெலிகாப்டரில் தேடும் பணி நடைபெற்றது. தேடும் பணி நிறைவு பெற்றதும் விமானப் படை பயிற்சி தளத்தில் இருந்து அறிக்கை அளிக்கப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீண்டும் தீயணைப்புத் துறை தேடுதல்

பாலாற்றில் ஹெலிகாப்டா் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியும் ராணுவ வீரா் மனோகரனை கண்டுபிடிக்க இயலவில்லை என்பது தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடா்பாக திருப்பதி விமானப்படை பயிற்சி தளத்தின் அதிகாரிகளிடம் எழுத்துப்பூா்வ அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, பாலாற்றில் மீண்டும் தீயணைப்புத் துறை மூலம் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தீயணைப்புத் துறையினா் மூலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரா் மனோகரனை தேடும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT