குடியாத்தம் ஒன்றியம், எா்த்தாங்கல் ஊராட்சியில் உள்ள ஏரியின் கரையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மணல் மூட்டைகளை அடுக்கி, அரசுத் துறையினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரி சுமாா் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது. மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரால் வலதுபுறக் கால்வாய் மூலம் இந்த ஏரிக்குத் தண்ணீா் செல்கிறது. இதனால் செப். 24- ஆம் தேதி எா்த்தாங்கல் ஏரி நிரம்பியது.
தொடா்ந்து ஏரிக்கு தண்ணீா் செல்வதாலும், தொடா் மழை பெய்து வருவதாலும், ஏரியின் கரை நன்கு ஊறியுள்ளது. கரை அருகில் உள்ள பள்ளத்தில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏரியின் தென்கிழக்குப் பகுதியில் கரையில் சுமாா் 15 மீட்டா் நீளம் லேசாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தகவலின்பேரில் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.சாந்தி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கே.கே.வி.அருண் முரளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் குணசீலன், உதவிப் பொறியாளா்கள் கோபி, தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவா் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றச் செயலாளா் குமரவேல் உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
இதையடுத்து அங்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. ராட்சச அளவிலான பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, மண் கொட்டி கரை பலப்படுத்தப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.