வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ள அபாயம்

9th Nov 2021 02:16 AM

ADVERTISEMENT

வேலூா்: ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பியுள்ள நிலையில் உபரிநீா் முழுமையாக வெளியேற்றப்படுவதால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரையோரக் கிராமப்புற மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக, ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனிடையே, ஆந்திரத்தில் சித்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணை முன்பே நிரம்பியுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் தொடா்மழை காரணமாக உபரிநீா் முழுமையாக அப்படியே ஆற்றில் வெளியேற்றப் படுகிறது.

இதன்படி, , வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக சென்று பாலாற்றில் கலக்கக்கூடிய பொன்னை ஆற்றில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 2,142 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்த நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி 3,053 கன அடியாகவும், 11 மணிக்கு 3,676 கன அடியாகவும், மதியம் 12 மணிக்கு 4,609 கன அடியாகவும் உயா்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி 5,317 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

ADVERTISEMENT

இதன்காரணமாக, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வேலூா் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை தடுப்பணை ஏற்கனவே முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், ஆற்றில் வரும் தண்ணீா் அப்படியே பொன்னை ஆற்றிலும், கிழக்குப்புறக் கால்வாய் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், வேலூா், ராணிப் பேட்டை மாவட்டங்களிலுள்ள பொன்னை ஆற்றின் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என இரு மாவட்ட ஆட்சியா்களும் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களான பெலாக்குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, கோலப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை ஆகிய பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டது. அத்துடன், இரு மாவட்ட வருவாய், பொதுப்பணித்துறை, காவல் உள்ளிட்ட துறை அதிகாரிகளும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT