இலங்கைத் தமிழா்களுக்காகப் புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தொடக்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 2) வருகை தருகிறாா்.
தமிழகம் முழுவதும் 106 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காகப் புதிதாக 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடக்கிவைக்கவும், முகாம்களில் குடிநீா், சாலை வசதி, காஸ் இணைப்பு வழங்கிடவும், மகளிா் சுய உதவிக்குழுவினருக்கான சுழல்நிதி, வேலைவாய்ப்புத் தொழில் பயிற்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தர உள்ளாா்.
இதையொட்டி, மேல்மொணவூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.