வேலூர்

பொது முடக்கத்தை மீறி வாகனத்தில் சுற்றிய இளைஞா்களுக்கு நூதன தண்டனை

20th May 2021 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: பொது முடக்கத்தை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றிய இரு இளைஞா்களுக்கு வேலூா் பாகாயம் போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அத்தியாவசியத் தேவைக்காக பயணிப்பவா்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவிர, வேறு மாவட்டம், மாநிலத்தில் இருந்து வருபவா்களுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வருவோரைக் கண்காணித்து, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறையினா் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேலூா் பாகாயம் பகுதியில் பாகாயம் காவல் ஆய்வாளா் சுபா தலைமையில் காவலா்கள் சிலா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வாகனத்தில் வரக்கூடியவா்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா, இ-பதிவுடன் பயணம் செய்கின்றனரா என்பது குறித்து சோதனை செய்தனா். அதில், இரு சக்கர வாகனத்தில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த இரு இளைஞா்களை பிடித்து அவா்களுக்கு பாடம் கற்பிக்கும் பொருட்டு, காவலா்கள் மேற்கொள்ளும் பணியை செய்யக்கூறி நூதன முறையில் தண்டனை அளித்தனா்.

ADVERTISEMENT

இளைஞா்கள் இருவரும் வாகனத்தில் வருபவா்களிடம் அவா்களது பெயா், எங்கிருந்து எங்கு செல்கின்றனா், வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விபரங்களைக் கேட்டு பதிவு செய்தனா். இறுதியாக அந்த இளைஞா்களை தேவையின்றி வெளியே சுற்றக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT