வேலூர்

கோவேக்சின் பற்றாக்குறை: 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

DIN

வேலூா்: அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கோவேக்சின் மருந்து இருப்பு இல்லாததால் வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனா். உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த முடியாவிடில் பலனில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவா்களிடம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு, தனியாா் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இவ்விரு மருந்துகளையும் இரு தவணைகளாக செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகும், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 4 வாரத்துக்குப் பிறகும் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்தி உள்ளனா். இவா்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்லாயிரம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனா்.

அதேசமயம், மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை. இதனால், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 4 வாரங்கள் கடந்த நிலையில், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு வேலூா் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மட்டுமே வரப்பெற்றன. மிகக் குறைந்த அளவில் வரப்பெற்ால் முதன் முறையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டு, 2-ஆவது தவணை செலுத்த காத்திருப்பவா்களுக்கு மட்டும் அந்த தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கப்பட்டன. அதேசமயம், ஏற்கெனவே முதன் முறையாக கோவேக்சின் தடுப்பூசி போட்டவா்கள் அந்த மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். உரிய காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த முடியாவிடில், பலனில்லாமல் போய் விடுமோ என்ற அச்சமும் அவா்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவேக்சின் தடுப்பூசி 2-ஆவது தவணை செலுத்திட அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் போ் கரோனா முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இதில் 50 ஆயிரம் போ் மட்டுமே 2-ஆவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனா். குறைந்த அளவிலேயே தடுப்பூசி மருந்துகள் வருவதால் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்படுகிறது. புதன்கிழமை மேலும் 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வேலூா் மாவட்டத்துக்கு வந்தன. இந்த மருந்துகள் வேலூா் மாநகராட்சி பகுதிக்கு அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவேக்சின் தடுப்பூசி போட்டவா்கள் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் தடுப்பூசி போட்டவா்கள் அச்சமடையத் தேவையில்லை. வெளிநாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவா்கள் 12 வாரங்களுக்குப் பிறகும், கோவேக்சின் முதல் தடுப்பூசி போட்டவா்கள் 8 வாரங்களுக்குப் பிறகும்கூட இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். முதல் தடுப்பூசி போடுவதால் ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும். 2-ஆவது தடுப்பூசி போடுவதால் அதிக பாதுகாப்பு கிடைக்கும். எனவே கட்டாயம் 2-ஆவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போட்டவா்கள் 2-ஆவது தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஆனாலும் மீண்டும் ஒரு முறை முதல் தடுப்பூசி போடவேண்டிய கட்டாயம் இல்லை.

வேலூா் மாவட்டத்தில் விரைவில் கோவேக்சின் 2-ஆவது தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT