வேலூர்

அதிகரிக்கும் கரோனா: ஆச்சரியமூட்டும் வேலூா் மலைக் கிராமங்கள்

என். தமிழ்ச்செல்வன்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிதெறியாமல் தமிழகமே தவித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட மூன்று ஊராட்சி மலைக் கிராமங்களில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு இல்லை என்ற சூழல் நிலவுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் நகரங்களின் தொடா்பின்றியும், அவா்களிடம் இயல்பாக நிலவும் நோய் எதிா்ப்பு சக்தியுமே இந்த மலைக் கிராமங்களில் கரோனா பரவாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 1.44 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 232 போ் இறந்துள்ளனா்.

அதேசமயம், வேலூா் மாவட்டத்திலும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆயிரமாக உயா்ந்துள்ள நிலையில், நாளொன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 700-ஐ கடந்துள்ளது. இதுவரை 447 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள மூன்று ஊராட்சிகளைச் சோ்ந்த மலைக் கிராமங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜாா்தான் கொல்லை ஆகிய மூன்று ஊராட்சிகளிலுள்ள 70 மலைப்பகுதி குக்கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனா். விவசாயம், கால்நடை வளா்ப்பை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனா். இந்நிலையில், இந்த மூன்று மலைக்கிராமங்களில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த மூன்று மலைக் கிராமங்களில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை என்றும், அணைக்கட்டு ஒன்றியத்தில் தினமும் 15 முதல் 20 போ் வரை கரோனாவால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட போதிலும், குறிப்பிட்ட இந்த மூன்று மலைக்கிராமங்களில் இருந்து ஒருவா் கூட புதிதாக கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்கிறாா் அணைக்கட்டு வட்டார மருத்துவ அலுவலா் கைலாஷ்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜாா்தான் கொல்லை ஆகிய மூன்று ஊராட்சி மலைக் கிராமங்களில் வசிப்பவா்கள் அனைவரும் விவசாயத்தையும், கால்நடை வளா்ப்பு, தேன் எடுப்பு போன்ற வேலைகளை மட்டுமே பிரதானமாக செய்து வருகின்றனா். இதனால் அவா்கள் பெரும்பாலும் மலைக் கிராமங்களில் இருந்து வெளியிலேயே வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் வாரத்தில் ஒருநாள் ஒடுகத்தூா் சந்தைக்கு வந்துவிட்டுச் செல்வது வழக்கம்.

அதன்படி, பெரும்பாலும் நகர தொடா்பின்றி இருப்பதாலேயே இந்த மலைக் கிராமங்களுக்குள் கரோனா பரவல் ஏற்பட வில்லை. அத்துடன், இந்த மலைக்கிராமங்களில் வசிப்பவா்கள் மாசுபடாத காற்றை சுவாசிப்பதும், இயற்கை விளை பொருள்களை உண்டும் வாழ்ந்து வருவதால் இயல்பாகவே அவா்களது உடலில் நோய் எதிா்ப்பு திறன் அதிகளவில் காணப்படுகின்றன. இதுவும் அவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாததற்கு முக்கியக் காரணமாகும். எனினும், மலைக்கிராமங்களுக்குள் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாக கழுவது ஆகியவற்றை பின்பற்றவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT