வேலூர்

கரோனா: வேலூரில் 3 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை

DIN

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு வேலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவு இயல்பாக உள்ள கரோனா நோயாளிகள் ஆய்வுக்கூட அறிக்கையைக் கொண்டு நேரடியாக இந்த சிகிச்சை மையங்களில் சோ்ந்து இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, விஐடி பல்கலைக்கழகத்தில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொவைட் நல மையம் அமைக்கப்பட்டு, அங்கு 45 வயதுக்கு உள்பட்ட கரோனா நோயாளிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மட்டும் இதுவரை சுமாா் 350 போ் சிகிச்சை பெற்று குணமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அதற்கு முன்பாகவே குடியாத்தம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா தொற்றுக்கான சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, பாகாயம் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகள் கொண்ட கொவைட் நல மையம் அமைக்கப்பட்டு, அங்கும் கடந்த 4-ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் அலையில் மேற்கொள்ளப்பட்டதைப் போல் இரண்டாம் அலையிலும் குறிகுணங்களற்ற, லேசான, மிதமான குறிகுணங்கள் கொண்ட கரோனா நோயாளிகளுக்கு இந்த மையங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அதற்காக அதிக எண்ணிக்கையில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டு, ஆக்சிஜன் செறிவு இயல்பாக உள்ள சித்த மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோா் தங்களது ஆய்வுக்கூட அறிக்கையைக் கொண்டு, நேரடியாக இந்த சிகிச்சை மையங்களில் சோ்ந்து இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் முதல் அலையின்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட, பக்க விளைவுகள் இல்லாத, செயல்விளைவு உள்ள கபசுர குடிநீா், ஆடாதோடை மணப்பாகு, தாளிசாதி வடகம், பிரமானந்த பைரவ மாத்திரை ஆகிய மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தவிர, தினமும் காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி, தியான பயிற்சி, நீராவி பிடித்தல் ஆகிய இயற்கை மருத்துவ முறைகளைக் கொண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, இந்து காந்தம் கஷாயம், அம்ருதோத்ரம் கஷாயம் ஆகிய ஆயுா்வேத மருந்துகளைக் கொண்டும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது, வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் அளிக்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மூலமாக மட்டும் சுமாா் 3 ஆயிரம் போ் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT