வேலூர்

கிராமப்புற வாக்குகளால் திணறிய துரைமுருகன்

3rd May 2021 02:24 PM | என்.தமிழ்ச்செல்வன்

ADVERTISEMENT

காட்பாடி தொகுதியில் 10ஆவது முறையாக போட்டியிட்டு திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தொகுதியிலுள்ள கிராமப்புற வாக்குகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இறுதியில் தபால் வாக்குகள் கைகொடுத்த போதிலும் துரைமுருகனின் இந்த வெற்றி அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன். இவர் தமிழக பேரவை தேர்தல் வரலாற்றில் 12ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் 10-ஆவது முறையாக போட்டியிட்டுள்ளார். இதில், தற்போது 8ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் குடியாத்தம் ஒன்றிய செயலர் வி.ராமு போட்டியிட்டார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது காட்பாடி தொகுதியில் முதல் சுற்றில் இருந்து 8-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலை வகித்து வந்தார்.

9-ஆவது சுற்று முதல் 20-ஆவது சுற்று வரை துரைமுருகன் முன்னிலை வகித்தார். இறுதியாக 22-ஆவது சுற்றிலிருந்து 25-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளரே முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே கடும் பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகனுக்கு இறுதியாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்தான் கைகொடுத்தது. தபால் வாக்கில் அவருக்கு 1778 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமுக்கு 608 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன்மூலம், துரைமுருகன் 10-ஆவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும், வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கு அடிப்படை தொகுதியிலுள்ள கிராமப்புற வாக்குகள் தான் என்பது தெரியவந்துள்ளது. 

இதற்கு தேர்தல் பிரசாரத்தின் போது துரைமுருகனுக்கு தொகுதியில் நிலவிய சில பலவீனத்தை தனக்கு சாதகமாக பலப்படுத்திக் கொண்ட அதிமுக வேட்பாளர் ராமுவின் சாமர்த்தியமும் முக்கியக் காரணமாகும். இதன்மூலம், 60 ஆண்டுகால மூத்த அரசியல்வாதி, மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலர், ஒரே தொகுதியில் 7 முறை வென்றவர் எனும் பல்வேறு பிம்பங்களைக் கடந்து துரைமுருகனை இறுதி வரை நுனி இருக்கையில் அமர வைத்த அதிமுக வேட்பாளர் ராமு யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த ராமு(48) பொறியியல் பட்டதாரி. விவசாயமே பிரதான தொழிலாக கொண்டுள்ள இவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

ADVERTISEMENT

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரான ராமு, முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். குடியாத்தம் தனித்தொகுதி என்பதால் அங்கு போட்டியிட வாய்ப்பின்றி காட்பாடி தொகுதியில் களமிறக்கப்பட்டார். இதனால் காட்பாடி தொகுதியில் தனக்காக பணியாற்ற போதுமான ஆட்கள் பலமில்லாததால் தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களைக் கொண்டே தேர்தல் பணியாற்றினார். குறிப்பாக, தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களை குறித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதி என்பதால் துரைமுருகன் தேர்தலில் வெற்றிக்கு பிறகு சென்னையில் தான் இருப்பார். 

தொகுதிப்பக்கம் வரமாட்டார். தொகுதி மக்கள் அவரை எளிதில் அணுக இயலாது என்பதை கடந்தகால உதாரணங்களுடன் தீவிரமாக பரப்புரை செய்தார். அத்துடன், இளைஞரான தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் கேட்டிருந்தார். ஆனால் துரைமுருகன் பிரசாரத்தில் சற்று தொய்வு நிலையே இருந்தது. தவிர, மார்ச் 30-ஆம் தேதியே பிரசாரத்தை முடித்துக் கொண்ட துரைமுருகனுக்கு கடைசி 4 நாட்கள் அவரது மகன் கதிர்ஆனந்த், மருமகள் சங்கீதா ஆகியோர்தான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவரான ராமுக்கு தொகுதியில் சுமார் 5 சதவீத அளவுக்கு நாயுடு சமூக வாக்குகள் இருப்பதும், அவருக்கு அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்ததும் கூடுதல் பலமாக மாறியது.

அந்தவகையில், தொகுதியில் நிலவிய அதிருப்தியும், மக்கள் புதியவரை எதிர்பார்த்திருந்தது உள்ளிட்ட பல காரணிகள்தான் துரைமுருகனுக்கு வாக்குகளில் பின்னடைவு ஏற்பட காரணமாகியுள்ளது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Tags : Katpadi constituency Durai Murugan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT