வேலூர்

தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருந்துகள் ஆந்திரத்தில் பறிமுதல்

DIN

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

இதன் எதிரொலியாக தமிழகத்தைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகள், 7 தனியார் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகள் ஆந்திரத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இடையே தமிழகத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பேருந்துகளும், அதேபோல் ஆந்திராவில் இருந்து அம்மாநில அரசு, தனியார் பேருந்து களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகளின் வழித்தட உரிமத்தை வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இரு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 பேருந்துகளும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டன. எனினும், அவற்றின் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து ஆந்திரத்திற்குச் சென்ற 16 தமிழக அரசுப்பேருந்துகள், 7 தனியார் பேருந்துகளையும் அம்மாநில அதிகாரிகள் குப்பம், பலமனேரி, புத்தூர், சித்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

இதனால், தமிழகத்திலிருந்து அம்மாநிலத்துக்கு பேருந்துகளில் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது, “விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 4 பேருந்துகள் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் பேருந்துகளை பொறுத்தவரை பேருந்துகல் முறையாக வழித்தட உரிமத்துடன்தான் இயக்கப்பட்டுள்ளன. ஆனால், அம்மாநில அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறுசிறு காரணங்களைக் குறிப்பிட்டு தமிழக பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் உடனடியாக பேருந்துகளை விடுவிக்க இயலவில்லை. ஆந்திர போக்குவரத்து அதிகாரிகளுடன் சனிக்கிழமை பேச்சு நடத்தி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT