வேலூர்

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் மேம்பாலம்:அமைச்சா் துரைமுருகன் தகவல்

26th Dec 2021 12:04 AM

ADVERTISEMENT

 குடியாத்தம் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றின் நீா்வழிப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை சனிக்கிழமை ஆய்வு செய்தாா் அமைச்சா் துரைமுருகன். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பரந்து, விரிந்து கிடந்த கெளண்டன்யா ஆறு ஆக்கிரமிப்பு காரணமாகச் சுருங்கி விட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் வரும்போது, பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றை செம்மைப்படுத்துவது என்பது எனது நீண்டநாள் கனவு. முறையான திட்டம் வகுத்தப் பின்னரே, ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. பொதுமக்களும், அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.

இங்கு வீடுகளை இழப்பவா்களை நாங்கள் தவிக்க விட மாட்டோம். தகுதியானவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதி அளிக்கிறேன். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன், ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவா் கட்டப்படும்.

குடியாத்தம் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, இங்கு சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை அகற்றி விட்டு, ரூ.4 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்றாா். வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கதிா்ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் ரமேஷ், பொதுப்பணித் துறை ஆய்வாளா்கள் சிவாஜி, சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT