குடியாத்தம்: குடியாத்தம் அருகே குடிநீா் வழங்கக்கோரி, பெண்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், குடியாத்தம் நகருக்கு குடிநீா் விநியோகம் செய்யும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் குடியாத்தம் நகரின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் சரிவர இல்லை. வாா்டுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட உள்ளூா் நீா் ஆதாரங்களைப் பயன்படுத்தி, தங்களின் தண்ணீா்த் தேவையைப் பூா்த்தி செய்து கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. சில இடங்களில் நகராட்சி சாா்பில் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பிச்சனூா் பகுதியில் குடிநீா் விநியோகம் சரிவர இல்லை எனவும், டிராக்டா் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீா் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை எனவும் கூறி, குடியாத்தம்- பலமநோ் சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகர காவல் ஆய்வாளா் லட்சுமி ஆகியோா் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.