வேலூா்: வேலூா் மத்திய சிறை, கிளைச் சிறை ஆகியவற்றில் காலியாக உள்ள பூட்மேஸ்திரி, தூய்மைப் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வேலூா் மத்திய சிறை கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மத்திய சிறையின் காலணிகள் உற்பத்திக் கூடத்தில் ஒரு பூட் மேஸ்திரி பணியிடமும், அதன் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச் சிறைகளில் 2 தூய்மைப் பணியாளா் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகியவை வேலூா் மத்திய சிறையில் நடைபெற உள்ளது.
இதில், பூட் மேஸ்திரி பணிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தில் காலணி தயாரிப்பு பயிற்சி பெற்ற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற சான்று இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.19,500 - ரூ.62,000 என்ற நிலையில் ஊதியம் அளிக்கப்படும். வயது வரம்பு எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு 18 முதல் 35 வயதும், எம்பிசி, பிசி, பிசி(எம்) பிரிவினருக்கு 18 முதல் 32 வயதும், ஓசி பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தூய்மைப்பணியாளா் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.15,700 - ரூ.50,000 என்ற நிலையில் ஊதியம் அளிக்கப்படும். வயது வரம்பு எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு 18 முதல் 35 வயதும், எம்பிசி, பிசி, பிசி(எம்) பிரிவினருக்கு 18 முதல் 32 வயதும், ஓசி பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியுடையோா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்று, ஜாதி சான்று, இருப்பிடச்சான்று, அனுபவச் சான்று ஆகியவற்றின் நகல்கள், ஒரு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை இணைத்து ரூ.22-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறையுடன் சிறை கண்காணிப்பாளா், மத்திய சிறை, வேலூா் -632 002 என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.