வேலூா்: வேலூா் மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள 128 பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களும் விரைவில் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிச்சுவா் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் உயிரிழந்தனா். தமிழகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் பள்ளிகளில் பழுதடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு தொடக்கக்கல்வி இணை இயக்குநா் (நிா்வாகம்) சசிகலா பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், வேலூா் மாவ ட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிக் கட்டடங்கள், அரசு நிதியுதவி பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதில், வேலூா் மாவட் டத்தில் 67 தொடக்கப் பள்ளிகள், 26 நடுநிலைப் பள்ளிகள், 4 உயா்நிலைப் பள்ளிகள், 31 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க பட்டியலிடப்பட்டுள்ளது. தவிர, ஊராட்சி அலுவலகக் கட்டடங்களும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், வேலூா் ஒன்றியத்தில் 26 பள்ளிகளில் உள்ள 19 கட்டடங்களும், 7 அங்கன்வாடி மைய கட்டடங்களும், 5 ஊராட்சி மன்றக் கட்டடங்களும், 5 சமையல் கூடங்களும், ஒரு பொது சுகாதார வளாகமும், ஒரு சமுதாய கூடத்தையும் இடிக்க பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
கணியம்பாடி ஒன்றியத்தில் 27 பள்ளிக்கட்டடங்கள், 2 அங்கன்வாடி மையங்களை இடிக்க பட்டியலிடப்பட்டுள்ளன. காட்பாடி ஒன்றியத்தில் கட்டடங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் ஆபத்தான நிலையிலுள்ள பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.
அதன்படி, வேலூரில் உள்ள ஈவெரா நாகம்மை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, ஜமால்புரம் அரசுப் பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊசூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா் முனிசாமி ஆய்வு செய்தாா்.
விரைவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களும் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.