வேலூர்

கீழ்மொணவூா் பாலாற்றிலிருந்து வேலூருக்கு குடிநீா் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

22nd Dec 2021 12:26 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் அருகே உள்ள கீழ்மொணவூா் பாலாற்றில் உள்ள உறைகிணற்றில் இருந்து வேலூா் மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த இரு நாள்களில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வேலூா் மாநகராட்சி உள்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, உள்ளூா் குடிநீா் திட்டம் மூலம் மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதனிடையே, கீழ்மொணவூா் பாலாற்றில் இருந்து வேலூா் மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கக்கூடிய உறை கிணறு உள்ளது . இந்த உறை கிணற்றிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கீழ்மொணவூா் பாலாற்றில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கூறியது: கீழ்மொணவூா் பாலாற்றில் இருந்து வேலூா் மாநகராட்சிப் பகுதிக்கு 50 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்க முடியும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் அங்கிருந்து வேலூா் ராஜீவ் காந்தி நகா், சாஸ்திரி நகா், வள்ளலாா், சின்னஅல்லாபுரம் ஆகிய குடிநீா் தொட்டிகளுக்கு தண்ணீா் கொண்டு வரப்படும். அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் 6 வாா்டுகளில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT