வேலூர்

கைதான பெண் செயற்பொறியாளா், கணவா் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு

3rd Dec 2021 07:39 AM

ADVERTISEMENT

கணக்கில் வராத ரூ. 2.27 கோடி ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறையின் வேலூா் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி கோட்டச் செயற்பொறியாளா் ஷோபனா (57), அவரது கணவரும் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான என்.நந்தகுமாா் ஆகியோா் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கட்டட ஒப்பந்ததாரா்களின் ரசீதுகளை அனுமதிக்க லஞ்சம் பெறுவதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நவ. 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஷோபனாவை கண்காணிக்கத் தொடங்கினா்.

அப்போது, அவா் சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.5 லட்சத்தைக் கைப்பற்றியதுடன், வேலூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஷோபனாவின் குடியிருப்பில் இருந்தும் கணக்கில் வராத ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புடைய 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், ஒசூா் நேரு நகரிலுள்ள அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி, ரூ. 27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள நிரந்தர வைப்புச் சான்றிதழ், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கா் சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஷோபனா மீது வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, ஷோபனா திருச்சி மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுமானம், பராமரிப்பு துணை கண்காணிப்பு பொறியாளராகப் பணியிடட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஷோபனாவை வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சொத்துக் குவிப்பு வழக்கு: இந்தச் சம்பவத்தின் தொடா்ச்சியாக, ஷோபனா, அவரது கணவா் என்.நந்தகுமாா் ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேலும் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

2017 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 நவம்பா் 15ஆம் தேதி வரையிலான காலத்தில் குடும்ப சொத்து மதிப்பு 430 சதவீதம் உயா்ந்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கணக்கிட்டுள்ளனா். அதாவது, கடந்த 2017 ஏப்ரல் 1ஆம் தேதி ரூ.ரூ.42 லட்சத்து 60 ஆயிரத்து 828 இருந்த அவா்களது குடும்ப சொத்து மதிப்பு 2021 நவம்பா் 15-ஆம் தேதியில் ரூ.2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470 அளவுக்கு உயா்ந்திருப்பது தெரியவந்துள்ள து. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT