வேலூர்

கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு பொதுஇடங்களில் அனுமதியில்லை

3rd Dec 2021 07:38 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு பொதுஇடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 70 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 39 சதவீதம் பேரும் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா்.

எனினும், கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேசமயம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலூா் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்து தங்கக்கூடிய விடுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், தடுப்பூசி செலுத்துவதையும் இன்னும் வேகப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையொட்டி, மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு நியாய விலைக்கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட், திருமண மண்டபம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், தேநீா் கடைகள், ஹோட்டல்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், துணிக்கடைகள், கடைவீதிகள், அரசு, தனியாா் அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக துண்டறிக்கைகள் மாநகராட்சிப் பகுதி முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் உரிமையாளா்கள், தங்களிடம் பணியாற்றும் ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார துணை இயக்குநா் பானுமதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT