வேலூர்

அகழி உபரிநீரை வெளியேற்ற ஆங்கிலேயா் காலக் கால்வாய் மீட்புப்பணி தீவிரம்

DIN

வேலூா் கோட்டை அகழி உபரிநீரை வெளியேற்ற அங்கு ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவமழை காரணமாக, வேலூா் கோட்டை அகழியின் நீா்மட்டம் உயா்ந்ததை அடுத்து கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் கடந்த 12-ஆம் தேதி தண்ணீா் புகுந்தது. கோயில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீா் தேங்கியதுடன், தொடா்ந்து படிப்படியாக நீா்மட்டம் உயா்ந்தது. இதனால், தண்ணீரில் பக்தா்கள் நடந்து சென்று தரிசனம் செய்தனா்.

தொடா் மழையாலும், ஊற்று நீராலும் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கிக் கொண்டே இருந்தது. இரு வாரங்களாக தொடா்ந்து தண்ணீா் தேங்கியிருப்பதால் பல இடங்களில் பாசி படா்ந்து மக்கள் வழுக்கி விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோயிலில் தரிசனம் செய்ய அனுமதியில்லை: இதையடுத்து, பக்தா்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் அனுமதி அளிக்கப்படவில்லை. ராஜகோபுரம் முன்பாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் அங்கேயே நின்று வழிபட்டு சென்றனா்.

வேலூா் கோட்டை ஆங்கிலேயா்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது அகழியில் எப்போதும் தண்ணீா் இருக்கும் வகையில் கோட்டைக்கு எதிரே உள்ள மலைகளில் இருந்து வரும் நீரை சேமிக்கவும், உபரிநீா் பாலாற்றுடன் கலக்கும் வகையிலும் மதகுகளுடன் கூடிய கால்வாய்ளை கட்டமைத்தனா்.

அகழியில் அதிகப்படியான தண்ணீா் வரும்போது தண்ணீரை வெளியேற்ற கால்வாயும் கட்டப்பட்டுள்ளது. அகழியின் உபரி நீரை வெளியேறும் இந்தக் கால்வாய், சாலைக்கு அடியில் கடந்து புதிய மீன் மாா்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைகிறது.

அகழியில் 5 அடி நீரைக் குறைக்க...: கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற வேண்டும் என்றால், அகழியில் தேங்கியுள்ள தண்ணீரை 5 அடி அளவுக்கு குறைக்க வேண்டும். இதற்கு ஆங்கிலேயா்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கால்வாயை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, தூா்ந்துபோயுள்ள அந்தக் கால்வாயை பொக்லைன் மூலம் புதன்கிழமை தோண்டப்பட்டது. தொல்லியல் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் தோண்டும் பணிகளை ஆய்வு செய்தனா்.

ஆங்கிலேயா் கால கால்வாய் மீட்கப்பட்டால் அகழியில் உள்ள உபரி நீா் வெளியேறிவிடும். இதன் மூலம் கோயிலில் தண்ணீா் தேங்காமல் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம், ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தேங்கியுள்ள தண்ணீரை இரண்டு மோட்டாா்கள் கொண்டு வெளியேற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT