வேலூர்

வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் தொடக்கம்: முதல் வாரத்தில் 161 மனுக்கள்

29th Sep 2020 04:33 AM

ADVERTISEMENT


வேலூர்: பொது முடக்கத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலன்கருதி இம்முகாம் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் இம்முகாமில் 161 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் நாள் முகாம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுகாண்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, பொதுமக்கள் தொலைதூரம் பயணித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவதால் அவர்களுக்கு கரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் சிரமங்களைத் தவிர்க்க மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, முதல் வாரமாக இந்த முகாம் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 20 வருவாய் அலுவலகங்களிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதற்கான ஒப்புகைச் சீட்டும் வழங்கினர். 

ADVERTISEMENT

இதில், சம்பந்தப்பட்ட உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்களும் பங்கேற்றனர். இம்முகாம்கள் மூலம் மொத்தம் 161 மனுக்கள் பெறப்பட்டன. 

அவற்றில் 87 மனுக்கள் வருவாய்த் துறை சார்ந்தவை, மற்றவை பிற துறைகள் சார்வையாகும். பெறப்பட்ட மனுக்கள் துறை வாரியாக பிரித்து வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பப்பட்டு, தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT