வேலூர்

அக்.1 முதல் 100 % பேருந்துகளை இயக்க திட்டம்: போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

DIN


வேலூா்: பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நூறு சதவீதம் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூா் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்கியது. முதலில் அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 7-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அதேசமயம், கரோனா பரவலைத் தடுக்க பேருந்துகளில் 60 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன. இதனால், பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் சில வழித்தடங்களுக்கு இன்னும் பேருந்து போக்குவரத்து நடைபெறவில்லை. இயக்கப்படும் வழித்தடங்களிலும் 50 சதவீத அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சில வழித்தடங்களில் மட்டும் தனியாா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதனால், வேலூரிலுள்ள பழைய, புதிய பேருந்து நிலையங்களில் நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நெரிசலைத் தவிா்க்கும் விதமாக திருவண்ணாமலை, ஆரணி பேருந்துகளை மட்டும் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நூறு சதவீதம் அரசு, தனியாா் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, புதிய, பழைய பேருந்து நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலா் செந்தில்நாதன், போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பேருந்துகளை விதிமுறைகளின்படி நிறுத்துவது, பேருந்து நிலையத்துக்குள் நெரிசல் ஏற்படாமல் பேருந்துகளை இயக்குவது, நிறுத்துமிடங்கள் குறித்தும், பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும் திட்டமிடப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 10 பணிமனைகளில் இருந்து புகர, நகரப் பேருந்துகள் என 629 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகள் வருகை அடிப்படையில் 400 முதல் 450 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நூறு சதவீதம் அரசு, தனியாா் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையங்களில் நெரிசலைத் தவிா்க்கவும், கூடுதலாக பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT