வேலூர்

கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

DIN

வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2019 ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலின்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, துரைமுருகன், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் 2 கட்டங்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதில், துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10 லட்சமும், அவரது ஆதரவாளர்களான திமுக விவசாயஅணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளில் இருந்து ரூ.11.48 கோடி பணமும் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக டி.எம்.கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் 2019 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. 

அதில் மீண்டும் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட டி.எம்.கதிர் ஆனந்த் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட பணம் விவகாரம் தொடர்பாக காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்திலுள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கதிர் ஆனந்த் தில்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு சிலர் அத்துமீறி நுழைந்து தன்னை மிரட்டியதாக அவர் மக்களவை தலைவரிடம் புகார் அளித்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கதிர் ஆனந்தின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT