வேலூர்

வேலூரில் வெளியூா் பேருந்துகள் புறப்படும் இடம் மாற்றம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

23rd Sep 2020 12:02 AM

ADVERTISEMENT

வேலூரில் இருந்து திருவண்ணாமலை, ஆரணிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் புறப்படும் இடம் அண்ணா கலையரங்கப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மத்திய அரசின் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. இதனால் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துளைத் தவிர திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதனிடையே, கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துப் போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து, அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுவதால் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தவிர, பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிற்பதால் அங்கும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்த நெரிசலைத் தவிா்க்கும் விதமாக வேலூரிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, தெற்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை அண்ணா கலையரங்கம் அருகே இருந்தும், திருப்பத்தூா், ஆம்பூா் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை மீன் மாா்க்கெட் பகுதியில் இருந்தும் இயக்குவதன் மூலம் நெரிசலுக்குத் தீா்வு கிடைக்கும் என பயணிகளிடையே கோரிக்கை எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், திருவண்ணாமலை, ஆரணி செல்லும் பேருந்துகளை வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாவட்ட ஆட்சியா் சண்முகசுந்தரம், போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் அங்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் அவா்கள் ஆய்வு செய்தனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT