வேலூர்

சாராயக் கும்பலைப் பிடிக்க போலீஸாா் தொடா்ந்து வேட்டை

1st Sep 2020 01:09 AM

ADVERTISEMENT

வேலூா்: தனிப்படை போலீஸாா் மீது தாக்குதலில் ஈடுபட்ட சாராயக் கும்பலைப் பிடிக்க அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட மலைப் பகுதியில் போலீஸாா் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை போலீஸாா், நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பலைப் பிடிக்க அல்லேரி மலைப்பகுதியில் சனிக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மலைப்பகுதியில் மறைந்திருந்த கும்பல், போலீஸாரை சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியது. இதில், காவலா் ராகேஷ், தலைமைக் காவலா் அன்பழகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், மற்றொரு பெண் காவலா் உள்ளிட்டோா் லேசான காயமடைந்தனா்.

இந்த தாக்குதல் நடத்திய சாராயக் கும்பலைப் பிடிக்க வேலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் 120 போலீஸாரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அல்லேரி, குருமலை மலைப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேடுதல் வேட்டை 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. எனினும், தலைமறைவான கும்பலை பிடிக்க இயலவில்லை.

இதனிடையே, குருமலை அடிவாரத்தில் உள்ள சிவநாதபுரம் பகுதியில் திங்கள்கிழமை காலை போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் ஓசை கேட்டதாக தகவல் வெளியானது. எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரிகள், கேட்டது வெறும் பட்டாசு வெடிக்கும் ஓசைதான் என்று கூறினா்.

ADVERTISEMENT

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் குறித்தும், தொடா்ந்து சாராய கும்பலை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வடக்கு மண்டல காவல் துறை தலைவா் நாகராஜன், வேலூா் சரக காவல் துணைத்தலைவா் என்.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் ஆகியோருடன் காணொலி மூலம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது, சாராயக் கும்பலைப் பிடிக்க பல்வேறு வழிமுறைகளை அவா் தெரிவித்திருப்பதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT