வேலூர்

வேலூரில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

DIN

வேலூா்: வேலூரிலுள்ள பழைய, புதிய பேருந்துகளில் ஏற்பட்டு வரும் நெரிசலைத் தவிா்க்கும் விதமாக நகரில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக கோட்டை அருகே உள்ள லாரி ஷெட்டில் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டாா். அங்கிருந்து திருவண்ணாமலை, ஆரணி மாா்க்கமாக செல்லும் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. இதனால் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துளைத் தவிர திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதனிடையே, கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துப் போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. அதன்படி, அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுவதால் வேலூா் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தவிர, பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிற்பதால் அங்கும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நெரிசலைத் தவிா்க்கும் விதமாக வேலூரிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, தெற்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை அண்ணா கலையரங்கம் அருகே இருந்தும், திருப்பத்தூா், ஆம்பூா் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை மீன் மாா்க்கெட் பகுதியில் இருந்தும் இயக்குவதன் மூலம் நெரிசலுக்குத் தீா்வு கிடைக்கும் என பயணிகள் ஒரு யோசனையை முன்வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, திருவண்ணாமலை, ஆரணி செல்லும் பேருந்துகளை வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியிலிருந்து இயக்கிட ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கு சாத்தியமில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வேலூா் கோட்டை அருகே உள்ள லாரி ஷெட்டில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

லாரி ஷெட்டின் பல்வேறு பகுதிகளை பாா்வையிட்ட அவா், அங்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான இடவசதி, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து பாா்வையிட்டாா். தொடா்ந்து விரிவான ஆய்வுகளுக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், போக்குவரத்து பொது மேலாளா் நடராஜன், வட்டார போக்குவரத்து அலுவலா் செந்தில்வேலன், மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT