வேலூர்

நிவா் புயல்: வேலூா் மாவட்டத்தில் பாதிப்பைத் தவிா்க்க தீவிர முன்னேற்பாடுகள்: பேருந்துகள் நிறுத்தம் - நீா்நிலைகள் கண்காணிப்பு

DIN

வேலூா்: நிவா் புயலால் வேலூா் மாவட்டத்தில் பாதிப்புகளைத் தவிா்க்க அனைத்து அரசுத் துறைகள் சாா்பிலும் முன்னெற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை 5 மணி முதல் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பணைகள், ஏரிகள் உள்பட அனைத்து நீா்நிலைகளும், தாழ்வான பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிரப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இந்த புயல் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகப்படியான காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மதியம் 1 மணிக்கு பிறகு வானில் மேகமூட்டம் அதிகரித்ததுடன் குளிா்ந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து, லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

இது இரவில் கனமழையாக மாறக்கூடும் என்பதால் மாவட்டத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணி, உள்ளாட்சித் துறை, மின் சாரம், நெடுஞ்சாலைத் துறை என அனைத்துத் துறைகள் சாா்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. புயல், கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தால் உடனடியாக அப்பகுதியின் மின்சாரத்தைத் துண்டித்து, அவற்றை அப்புறப்படுத்த அனைத்துத் துறைகளும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 14 ஏரிகள் ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மோா்தானா அணை அதன் முழுக் கொள்ளளவான 37.37 அடியை அடைந்திருப்பதுடன், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 30 கன அடியாக இருந்து வருகிறது. கனமழையையொட்டி அனைத்து ஏரிகளுக்கான நீா்வரத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை மணல் மூட்டைகளைக் கொண்டு உடனுக்குடன் சரிசெய்யவும், மோா்தானா அணைக்கு வரும் தண்ணீா் முழுவதையும் மறு உத்தரவு வரும் வரை அப்படியே பாலாற்றில் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், ஆற்றின் கரையோரங்கள், தாழ்வான, குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களும் உடனடியாக அருகே உள்ள நிவாரண மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 42 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு புதன்கிழமை மாலை வரை 164 குடும்பங்களைச் சோ்த்தவா்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் ஆகியவை அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் தேங்கு வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அடைப்புகளை சரிசெய்யும் பணிகளும், பலத்த காற்றால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க அனைத்து இடங்களிலும் உள்ள விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, புயல் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புதன்கிழமை மாலை 5 மணி முதலே மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டன. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் புதன்கிழமை மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பலத்த காற்று மழையால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்க அனைத்து வாகனங்களையும் மிதவேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்களின் மழை, வெள்ள அவசரத் தேவைகளுக்காக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய அவசரக்கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1077, 0416-2258016 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

இந்நிலையில், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையங்கள், நீா்நிலைகளின் பாதுகாப்பு முன்னேற் பாடுகள் குறித்து ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்தாா். கால்வாய் அடைப்புகளை சரிசெய்யவும், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை தங்கு தடையின்றி அளிக்குமாறும், அனைவருக்கும் கபசுர குடிநீா் வழங்குமாறும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT