வேலூர்

மருத்துவ மாணவர்களுக்கு முழுச் செலவு: திமுகவின் அறிவிப்பால் அரசு விழிப்பு

21st Nov 2020 06:28 PM

ADVERTISEMENT

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, திமுக அறிவிப்பால் அரசு விழிப்புணர்வு அடைந்திருப்பதை காட்டுகிறது என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து காட்பாடியில் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்களுக்கு அவர்களது கல்விச்செலவு முழுவதையும் திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு அரசுக்கு தான் இத்தகைய நலிந்த பிரிவினருக்கு முன்வந்து உதவியிருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவ்வாறு ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்கட்சியான, அரசில் அமரக்கூடிய திமுக செய்ய முன்வந்திருப்பது அரசியல் வரலாற்றில் விசித்திரமாகும். 

அரசு பள்ளி மாணவர்கள் இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்றால், அதற்கும் முழுமுயற்சி எடுத்ததும் திமுகதான். ஆளுநர் மாளிகையின் முன்பு திமுக நடத்தியப் போராட்டம் காரணமாகத்தான். இனியும் இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை நிறுத்திவைக்கக்கூடாது எனக்கூறி அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். நீதிமன்றம் 10 சதவீதம் ஒதுக்கக்கூறியது. ஆனால், தமிழக அரசு 7.5 சதவீதம் ஒதுக்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வழங்க வேண்டியதுதான் திமுக லட்சியமாகும். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியதாக அதிமுக கூறியது.

ஆனால், அப்படி எந்த தீர்மானமும் வரப்பெறவில்லை என்று குடியரசுத் தலைவர் மறுத்துள்ளார். வரும்காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உதயநிதிஸ்டாலினை கைது செய்திருப்பதன் மூலம் அவரை ஹீரோ ஆக்கியுள்ளனர். அரசின் இத்தகைய சர்வாதிகார போக்கு வீழ்ச்சிக்கான அறிகுறியாகும். அமைச்சர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் பெரும்கூட்டம் கூடுகிறது. அதேபோல், சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாலையில் நடந்து சென்றுள்ளார். அவர்களால் ஏற்படாத கரோனா தொற்று உதயநிதி ஸ்டாலினால் மட்டும் ஏற்படும் எனக்கூறி அவரை கைது செய்வது ஒரு நல்ல ஆட்சிக்கு உகந்ததல்ல.

ADVERTISEMENT

 அமித்ஷாவின் தமிழக வருகையின் மூலம் அரசியலில் எதுவும் நடந்துவிடாது. மத்திய அமைச்சராக வருவது அவரது உரிமை. ஆனால், அவர் மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது. திமுக இன்னும் கூட்டணி பேச்சு கட்டத்துக்கு வரவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது திமுக அறிவிப்பால் அரசு விழிப்புணர்வு அடைந்திருப்பதை காட்டுகிறது. அப்படியென்றால் தமிழக அரசு ஸ்டாலின் வழியில் நடைபெறுகிறதா என்பது கேள்வியாகிறது என்றார்.
 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT