வேலூர்

விளை பொருள்களை அனுப்ப தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்

30th Mar 2020 10:54 PM

ADVERTISEMENT

 

விவசாய விளை பொருள்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்து செல்ல தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இதற்காக விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க விதைப்பு, நடவு, அறுவடைப் பணிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விவசாயத் தொழிலாளா்கள் நகா்வு, பண்ணைக் கருவிகள் நகா்வு ஆகியவற்றுக்கு தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விவசாய விளைபொருள்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்து செல்ல சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்தால் அதைப் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை.

ADVERTISEMENT

மேலும், வேலூா் மாவட்டத்தில் உள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ள அனைத்து தனியாா், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தங்குதடையின்றி கிடைக்கும். இந்த விற்பனை நிலையங்கள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறக்கப்பட்டு இடுபொருள்கள் விற்பனை செய்யப்படும். அனுமதிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கவும், சமூக இடைவெளியைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT