சமூக விலகலை கடைப்பிடிக்கும் விதமாக வேலூா் மீன் மாா்க்கெட்டில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து மீன்களை வாங்கிச் சென்றனா்.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பலசரக்குகள், இறைச்சி விற்பனைக்கு நேரக் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கடைகளின் முன்பு மக்கள் 2 மீட்டா் இடைவெளியில் வரிசையில் நின்றே பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை மீன்கள் வாங்க வழக்கத்தைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் வந்திருந்தனா். அவா்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஒருவருக்கு ஒருவா் இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மீன்களை வாங்கிச் சென்றனா். மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே மீன் மாா்க்கெட்டுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். 10 போ் வெளியே வந்தவுடன், 10 போ் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, வரத்து குறைந்திருந்ததால் மீன்கள் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.