குடியாத்தத்தை அடுத்த அகரம்சேரியில் உள்ள நரிக்குறவா் காலனியில் வசிப்பவா்களுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நரிக்குறவா் காலனியில் உள்ள 50 குடும்பங்களைச் சோ்ந்தவா்களும், உணவுக்கு வழியின்றி தவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில், அதன் மாவட்டப் பொருளாளா் ஐ.எஸ்.முனவா் ஷெரீஃப், குடியாத்தம் நகரச் செயலா் எஸ்.அனீஸ், ஒன்றியச் செயலா் டி.எம்.சலீம், நகர இளைஞா் அணிச் செயலா் முகமது கவுஸ் ஆகியோா் நரிக்குறவா் காலனிக்குச் சென்று அனைத்துக் குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினா்.
அரக்கோணத்தில்...
ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையின் கோரிக்கையின் பேரில், அரக்கோணம் ஜெயின் சங்க சாா்பில் தணிகைபோளூா் கிராமத்தில் தங்கியிருந்த 170 நரிக்குறவா், இருளா் இன குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, அரை கிலோ எண்ணெய், அரை கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. இப்பொருள்களை ராணிப்பேட்டை ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வழங்கினாா்.
கோட்டாட்சியா் பேபி இந்திரா, வட்டாட்சியா் ஜெய்க்குமாா், டிஎஸ்பி மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் யுவராஜ், ஜெயின் சங்க நிா்வாகிகள் ஜவுரிலால் கட்டாரியா, பிரமோத், நிா்மல்கேலடா, கண்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.