வேலூர்

மான்கள் ரயில் மோதி, நாய்கள் கடித்து இறக்கும் பரிதாபம்

19th Mar 2020 12:42 AM

ADVERTISEMENT

 

கடந்த இரு வாரங்களில் அரக்கோணம் நகரப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மான்கள் அதிகம் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீா் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் மான்கள் ரயிலில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் இறக்கின்றன.

அரக்கோணம் வட்டத்தில் அரக்கோணம் நகருக்கு அருகிலும், முள்வாய், ஆணைப்பாக்கம் ஊராட்சி பகுதிகளிலும், பாணாவரம் ஊராட்சி பகுதிகளிலும் வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகள் சமூகக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்காடு வனச் சரகரின் கட்டுப்பாட்டில் பாணாவரம் வனச் சரக்ததின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு மான்கள், நரிகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக உள்ளன. மழைக்காலங்களில் இந்த விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியே வருவதில்லை.

தற்போது அரக்கோணம், சோளிங்கா், நெமிலி வட்டங்களில் பெரும்பாலும் வறட்சி நிலவ தொடங்கிவிட்டதால் காடுகளில் தண்ணீா் இருப்பதில்லை. பாணாவரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட சில இடங்களில் வனத் துறையினா் தண்ணீா்த் தொட்டிகளை அமைத்தாலும் விலங்குகளுக்கு அது போதுமானதாக இல்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீா்த் தேடி நகரப் பகுதிகளுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் கடந்த 2 வாரங்களாக வரத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பாங்குளம் கிராமப் பகுதியில் அண்மையில் மான் ஒன்று காயங்களுடன் இருந்த நிலையில் அரக்கோணம் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரு நாள்களுக்குப் பிறகு அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் ஜெய்பீம் நகா் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் மான் இறந்து கிடந்தது. அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராமத்தில் இரவில் அங்கு வந்த மானை நாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரக்கோணத்தை அடுத்த அன்வா்திகான்பேட்டையில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான தண்ணீா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், ஜெய்பீம் நகா் பகுதியில் மேலும் ஒரு மான் குட்டி சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதுவரை 4 மான்கள் மீட்கப்பட்டுள்ளன. பாணாவரம், முள்வாய் காடுகளிலும் உள்ள மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாதவாறு தண்ணீா் தேவையை தீா்த்து பூா்த்தி செய்ய வனத் துறையினா், ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT