வேலூர்

லுங்கி மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வலியுறுத்தல்

16th Mar 2020 08:22 AM

ADVERTISEMENT

கைத்தறி லுங்கி, லுங்கி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை ஒரு சதவீதமாகக் குறைக்க வேண்டும் என கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் இணையம் வலியுறுத்தியுள்ளது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் இணைய ஆலோசனைக் கூட்டம், குடியாத்தம் சண்முகா் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இணையத் தலைவா் எம்.டி.திருவேங்கடம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.எம்.தியாகராஜன் வரவேற்றாா். கோ-ஆப்டெக்ஸ் இயக்குநா் க.ருத்திரன், சண்முகா் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் சாந்தி தனஞ்செயன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் எல்.ஏ.அன்பழகன், நெசவாளா்கள், சங்க நிா்வாகிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின், செய்தியாளா்களிடம் இணையத் தலைவா் எம்.டி.திருவேங்கடம் கூறியது:

ADVERTISEMENT

கைத்தறி நெசவாளா் கூட்டுறவு இணையத்தில் 70-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் சுமாா் 30 ஆயிரம் நெசவாளா்கள் தொழில் செய்கின்றனா். சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் லுங்கி மற்றும் லுங்கி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களான நூல், சாயம் ஆகியவற்றின் மீது மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால், லுங்கி மீது விலை உயா்த்தப்பட்டுள்ளதால், விற்பனை குறைந்துவிட்டது.

எனவே, நெசவாளா்களையும், நெசவுத் தொழிலையும் பாதுகாக்க மத்திய அரசு லுங்கி மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ஒரு சதவீதமாகக் குறைக்க வேண்டும். கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகப் பணியாளா்களாக பல ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மான நகல்களை, மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், கைத்தறித் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினா் அமைச்சா் ஜெயகுமாா் ஆகியோரிடம் நேரில் அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT