வேலூர்

கரோனா: வேலூா் மருத்துவமனையில் ஒரே நாளில் இருவா் பலி

17th Jun 2020 07:38 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டிருந்த ஆம்பூா் தொழிலதிபரும், திருவண்ணாமலையைச் சோ்ந்த முதியவரும் ஒரே நாளில் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரைச் சோ்ந்த 64 வயது தொழிலதிபா் சென்னை பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது ஆம்பூருக்கு வந்து சென்ற இவருக்கு கடந்த 9-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது உடல் ஆம்பூா் பகுதியிலுள்ள மயானத்தில் கரோனா நோயாளிகளுக்கான வழிமுறைகளின் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்த 69 வயது முதியவா், கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் போளூா் மயானத்தில் கரோனா நோயாளிகளுக்கான வழிமுறைகள் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த இருவரது குடும்பத்தினா், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT