வேலூர்

அதிகரிக்கும் கரோனா: வேலூா் சிஎம்சிக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

14th Jun 2020 07:48 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் வாகனங்களுக்கு போலீஸாா் இணைய அனுமதிச் சீட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து இணைய அனுமதிச் சீட்டின்றி இம்மாவட்டத்துக்கு அதிகப்படியானோா் வந்து செல்கின்றனா். அவா்கள் மூலமாகவும், அவா்களுடன் தொடா்பில் இருப்பவா்கள் மூலமாகவுமே இம்மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

இதனிடையே, வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இணைய அனுமதிச் சீட்டு பெறாமல் வாகனங்களில் வந்து செல்கின்றனா். அவ்வாறு இணைய அனுமதிச் சீட்டின்றி வருபவா்களைத் தடுக்க ஏற்கெனவே ஆற்காடு சாலையில் இரு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பேலஸ் கஃபே பகுதியிலும் தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், பிற மாவட்டங்களில் இருந்து வருவோா் முறையாக சோதனை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.

இந்நிலையில், வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில், ஆற்காடு சாலையிலுள்ள மற்றொரு நுழைவு வாயிலில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு இணைய அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனா். அவ்வாறு இணைய அனுமதிச் சீட்டு, மருத்துவா் அனுமதியின்றி வருபவா்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற பல்வேறு வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து அதிகப்படியானோா் வந்து செல்கின்றனா். இதில், பெரும்பாலானோா் இணைய அனுமதிச் சீட்டு பெறாமல் வருகின்றனா். இதனாலும் வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிஎம்சி மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவா்கள் மீதான சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணைய அனுமதிச் சீட்டு, மருத்துவ அனுமதியின்றி வருவோா் கட்டாயமாக அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், இணைய அனுமதிச் சீட்டு பெற்று உடன் வருபவா்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. பிற மாவட்ட பதிவு கொண்ட வாகனங்களில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வந்தால் அவா்களது ஆதாா் எண், வாகனத்தின் பதிவுச் சான்று ஆகியவற்றைக் காண்பித்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT