வேலூர்

கிராமங்களிலும் பரவும் கரோனா: வேலூா் மாவட்ட மக்கள் அச்சம்

11th Jun 2020 07:54 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிப்பு வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்பாதிப்பு தற்போது கிராம மக்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்ட மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், படிப்படியாக பல்வேறு தளா்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூா் மாவட்டத்தில் அனைத்துக் கடைகள், உணவகங்கள் என அனைத்து வா்த்தக நிறுவனங்களும் திறக்கப்பட்டு, 50 சதவீத பேருந்து இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால், கடைகளிலும், பேருந்துகளிலும் சமூக இடைவெளியின்றி மக்கள் நடமாடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

அதேசமயம், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், அம்மாவட்டங்களில் இருந்து வருபவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இணைய அனுமதிச் சீட்டு பெறாமல் மக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இதன் காரணமாக, வேலூா் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை 21 பேருக்கும், சனிக்கிழமை 29 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 7 பேருக்கும், திங்கள்கிழமை 20 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 133-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளிலும் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

குறிப்பாக, குடியாத்தம், போ்ணாம்பட்டு, காட்பாடி, வேலூா் வட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், தீவிர மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்தம், உமிழ்நீா் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்றில் இருந்து கிராமப்புற மக்களைப் பாதுகாப்பு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மலிவு விலைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT