வேலூர்

வேலூர் கோட்டையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு

8th Jun 2020 12:12 PM

ADVERTISEMENT

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்களை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி வேலூர் கோட்டையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை கோட்டை வளாகத்துக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் வேலூர் கோட்டை விஜயநகர பேரரசு காலத்தில் இந்த பகுதியை ஆட்சி புரிந்த குச்சிபொம்மு நாயக்கரால் 16-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 

இந்த கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில், அருங்காட்சியகங்கள், திப்புசுல்தான், இலங்கையின் கடைசி மன்னரான ஸ்ரீவிக்கிரம சிங்க ராஜசிங்கன் குடும்பத்தினருடன் சிறை வைக்கப்பட்ட இடங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. 1806-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் நடத்திய புரட்சிதான் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தததாக வரலாறு கூறுகிறது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டையானது கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதலே அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மட்டு மின்றி உள்ளூர் மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப் படும் வேலூர் கோட்டை வளாகம் தற்போது வெறிச்சோடி கிடக்கிறது. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வு செய்யப்படும் விதமாக மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வேலூர் கோட்டையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. 

இதுதொடர்பாக ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் உத்தரவுப் படி வேலூர் கோட்டை திறக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை வேலூர் கோட்டை வளாகத்துக்குள் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுற்றுலாப் பயணிகள் வருகையின்மையால் வேலூர் கோட்டையைச் சுற்றி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், குதிரை சவாரி விடுவோர் என பல்வேறு தரப்பினரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், தொல்லியல் துறை சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவால் மகிழ்ச்சியடைந்திருந்த அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மறுப்பு மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் போன்றோருக்கு நிலைமை சரியாகும் வரை அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT