வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் 4 மருத்துவர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரை 109 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில், 4 பேர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களாவர்.
மேலும், குடியாத்தத்தில் 29 வயது ஆண், வேலூர் காகிதப்பட்டறையில் 28 வயது பெண், தோட்டப்பாளையத்தில் 77 வயது ஆண், 69 வயது பெண் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து அண்மையில் வேலூர் மாவட்டத்துக்கு வந்தவர்களாவர். தொடர்ந்து, இவர்களுக்கு சிஎம்சி மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.