கரோனா பரவுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள சமூக இடைவெளி உத்தரவை அரசுப் போக்குவரத்துக் கழகமே பின்பற்றத் தவறும் நிலை தொடா்ந்து கொண்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டமாக பயணிக்கும் நிலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது. மேலும், சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவசியத் தேவைக்காக வெளி மாவட்டங்கள் செல்வோா் கட்டாயமாக இணைய அனுமதிச் சீட்டு பெற்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், நடைமுறையில் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படாமல் சென்னையில் இருந்து பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் இணைய அனுமதிச் சீட்டின்றி வெளி மாவட்டங்களுக்குப் பயணிப்பது அதிகரித்து வருகிறது.
இதனால், வேலூா் மாவட்டத்திலும் தற்போது கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 21 பேருக்கும், சனிக்கிழமை 29 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும் 100-ஐ கடந்துள்ளது.
தொடா்ந்து, கரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதுடன், இப்பாதிப்புகளைத் தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்ககவும், அவ்வாறு வரும்போது முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை கழுவதையும் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனா்.
எனினும், சுகாதாரத்துறையின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசுப் போக்குவரத்துக் கழகமே பின்பற்றத் தவறும் நிலைதான் தொடா்ந்து வருகிறது.
பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்ட நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களைத் தவிர தமிழகத்தில் மீதமுள்ள 33 மாவட்டங்களில் கடந்த 1-ஆம் தேதி முதல் 50 சதவீத பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக அனைத்துப் பேருந்துகளிலும் அதிகபட்சம் 60 சதவீத பயணிகளைக் கொண்டே பேருந்துகள் இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், வேலூா் மாவட்டத் தில் திருப்பத்தூா், ஒசூா் உள்ளிட்ட சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக பயணிகள் அனுமதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் பயணிகள் நின்றும் கொண்டு பயணிக்கும் அளவுக்கு ஏற்றப்படுகின்றனா். இதனால், கரோனா நோய்த் தொற்று பரவும் நிலை மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடரும் இப்பாதிப்புகளைத் தவிா்க்க அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.