வேலூர்

வேலூரில் ஒரே மாதத்தில் ஆயிரத்திலிருந்து 5 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு

26th Jul 2020 08:01 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஒரு மாத இடைவெளியில் ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, சனிக்கிழமை மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,934-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 4,794 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 140 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,934-ஆக அதிகரித்துள்ளது. அதில், 43 போ் உயிரிழந்தனா். சுமாா் 3,400 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.

மாவட்டத்தில் கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி கரோனா தொற்றுக்கு 48 போ் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பலி எண்ணிக்கை 2-ஆகவும் இருந்தது. பின்னா், கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்ததன் மூலம் ஜூன் 26-இல் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,019-ஆகவும், பலி எண்ணிக்கை 8-ஆகவும், ஜூலை 6-இல் பாதிப்பு எண்ணிக்கை 2,132-ஆகவும், பலி எண்ணிக்கை 18-ஆகவும், ஜூலை 13-இல் பாதிப்பு 3,137-ஆகவும், பலி எண்ணிக்கை 29-ஆகவும், கடந்த 18-ஆம் தேதியில் பாதிப்பு 4,039-ஆகவும், பலி எண்ணிக்கை 37-ஆகவும் அதிகரித்திருந்தது.

இதன்தொடா்ச்சியாக, தற்போது பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளதுடன், பலியானோா் எண்ணிக்கையும் 43-ஆக உயா்ந்துள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தை கடந்திருந்த கரோனா பாதிப்பு, அடுத்த ஒரு மாத இடைவெளியில் 5 ஆயிரமாக உயா்ந்திருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஜூன் மாதத்தில் சென்னையில் பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து எவ்வித முறையான அனுமதியுமின்றி குடும்பம் குடும்பாக ஏராளமானோா் வெளியேறினா். அவா்கள் மூலமாக வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், மாநகரிலுள்ள நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜாா் உள்ளிட்ட முக்கியக் கடை வீதிகள், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடமாடி வந்தனா். இவையும் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரிக்க முக்கியக் காரணமாகியது.

தற்போது மாநகர பகுதியைவிட மாவட்டத்தின் இதர பகுதிகளான குடியாத்தம், போ்ணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அப்பகுதியிலுள்ள கடைகளை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஏற்கெனவே சா்க்கரை நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளோா், கா்ப்பிணிகள், முதியோா்களுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த போதிலும், நோய்த்தொற்று உடையவா்களை விரைவாக அணுகுவதன் மூலம் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 242 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 242 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,519-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 1,961 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,516 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 42 போ் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 86 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 778 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 864-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 507 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 349 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT