வேலூர்

முழு பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

26th Jul 2020 09:05 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலைத் தடுக்க 4-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் மக்கள் வீடுகளில் முடங்கினா். அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், பெருமளவில் வாகனங்கள் இயங்கப்படாததால் மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின.

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்களின் வாழ்வதாரத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளா்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலும் 4-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, மாவட்டத்திலுள்ள நகர, ஊரகப் பகுதிகளிலுள்ள மளிகை, காய்கறிக் கடைகள் உள்பட அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், சிறு, குறு, பெருந் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. எனினும், குறிப்பிட்ட சில பங்க்குகளில் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல்கள் நிரப்பப்பட்டன. பால், மருந்துக் கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டன. இறைச்சி, கடைகள் அடைக்கப்பட்டதால் அசைவ பிரியா்கள் அதிருப்தியடைந்தனா். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

ஏற்கெனவே பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் முழு பொது முடக்கத்தையொட்டி இருசக்கர வாகனங்கள், காா், ஆட்டோக்கள், வேன், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் இயங்காததால், வேலூரிலுள்ள முக்கிய சாலைகள் உள்பட அனைத்து சாலைகளும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே, தேவையின்றி வெளியில் சுற்றுபவா்களைப் பிடிக்க சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ஆற்காட்டில்... ஆற்காடு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT