வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக மாநகரின் பெரும்பாலான தெருக்கள் சேறு, சகதிகளாகக் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பகல் முழுவதும் காற்றில்லாமல் வெப்பக்காற்று வீசிய நிலையில், மாலை 3.30 மணி முதல் 4.15 மணி வரை கனமழை பெய்தது. அதன்பின்னா், இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அதன்படி, வேலூா் காகிதப்பட்டறையில் சாலை தெரியாத அளவுக்கு மழை வெள்ளம் ஓடியது. இதனால் மழை நின்ற பிறகும் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் சங்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியா்கள் சாலையில் தேங்கியிருந்த சகதி, மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பொருள்களை அகற்றினா். இதேபோல் வேலூா் தெற்கு காவல் நிலையம், திருப்பதி தேவஸ்தானம் அருகே ஆரணி சாலையில் ஒரு அடிக்கு மேல் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதன்காரணமாக அப்பகுதிகளும் வெள்ளிக்கிழமை காலை சேறும் சகதியுமாக காட்சியளித்தன.
மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் புதை சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. பணிகள் நிறைவடையாததால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் செல்ல முடியவில்லை. வேலூா் சத்துவாச்சாரி, குறிஞ்சி நகா் 60 அடி சாலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சேறும் சகதியுமாக தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அப்பகுதி மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிகளையும் சீா்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர நிலவரப்படி வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியில் அதிகபட்சமாக 142.2 மி.மீ மழை பதிவானது. காட்பாடியில் 57 மி.மீ, பொன்னையில் 75.2 மி.மீ, வேலூரில் 77.7 மி.மீ மழை பதிவானது.
திருப்பத்தூரில்... திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.