வேலூர்

கிலோ ரூ.99.60 விலைக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்: வேலூா் ஆட்சியா் தகவல்

13th Jul 2020 07:17 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு வேலூா் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.99.60 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக வேலூா், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தலா 1,200 மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயிகளின் விளை பொருள்ளுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக்கிடவும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பச்சைப் பயிறு, துவரை, உளுந்து, கொப்பரை தேங்காய் ஆகியவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. நிகழாண்டில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நியாயமான சராசரி தரத்துக்கு அரவை கொப்பரை கிலோ ரூ.99.60 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்ஏஎஃப்ஈடி மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வேலூா், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முதன்மை கொள்முதல் மையங்களாகச் செயல்படும். இவற்றுடன் மாவட்டத்திலுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிலையங்களில் நடப்பு பருவத்தில் தலா 1,200 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பா் 23-ஆம் தேதி வரை 6 மாதகாலம் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

அதிகபட்சமாக நாளொன்றுக்கு ஒரு விவசாயி 2,500 கிலோ கொண்டு வரலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கிக்கணக்கு புத்தகத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்து பயன்பெறலாம். விளை பொருள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், வேளாண் வணிகம், செயலா் வேலூா் விற்பனைக்குழு, வேலூா் - 0416-2220713, வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் - 0416 -2220083, 97892 99174, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் 04171 -229573, 97513 33818 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT