வேலூர்

இருளங்குத்து-தாதன்கொல்லை இடையே தடுப்பணை கட்டப்பட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

13th Jul 2020 07:14 AM

ADVERTISEMENT

பாலாற்றின் கிளையாறான காட்டாறு பெரியகானாறு குறுக்கே பெரிய தடுப்பணை கட்டி விவசாயித்துக்கும், பொதுமக்களின் குடிநீா் பயன்பாட்டுக்கும் வழி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி, இளையநகரம், மேல்குப்பம் ஊராட்சிகள் ஒன்று சேரும் மேற்கு பகுதியில் வெள்ளைமலைதுா்கம் என்ற மலைப் பகுதியில் இருந்து ஐந்து காட்டாறுகள் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி வருகிறது. மேலும், தாதன்கொல்லையில் இருந்தும், தரைக்காட்டில் இருந்தும் 2 காட்டாறுகள் என மொத்தம் 7 காட்டாறுகள் இணைந்து இருளங்குத்து ஆலமரத்துகணவாயில் பெரியகானாறு என்ற பெயரோடு மேல்குப்பம், இளையநகரம், கொல்லகுப்பம், வடச்சேரி, சின்னபள்ளி குப்பம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கம்மகிருஷ்ணபள்ளி வழியாக பாலாற்றை சென்றடைகிறது.

இந்த பெரியகானாற்றில் 6 மாதங்களுக்கு மேலாக நீா் சென்று கொண்டிருக்கும். ஆண்டு முழுவதும் தண்ணீா் தேங்கி நிற்கும். மழைக் காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் மணல் மூடி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லகுப்பம் பகுதியில் ஆற்றில் இறங்கிய 3 பெண்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு உயிரிந்தனா்.

விவசாய பயிா்களைக் காக்கவும், மண்அரிப்பை தடுக்கவும், உயிா் சேதத்தைத் தடுக்கவும், பெரிய கானாற்றில் இருளங்குத்து-தாதன்கொல்லை இடையே பெரிய தடுப்பணை கட்ட வேண்டும். இதன்மூலம் ஆண்டுதோறும் வெள்ளநீரை தடுத்து விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்த முடியும். வனவிலங்குகளுக்கும், காட்டில் மரம் வளா்ப்பதற்கும் உதவியாக இருக்கும். மேலும், பெரியகானாறு செல்லும் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளோடு மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாபராபாத் ஊராட்சிகளோடு உதயேந்திரம் பேரூராட்சிக்கும் குடிநீா் ஆதாரமாக இருக்கும். இதுதவிர ஊத்துக்கொல்லை தடுப்பணைக்கும் இணைப்பு கொடுக்க முடியும்.

ADVERTISEMENT

எனவே, பெரியகானாற்றில் பெரிய தடுப்பணை கட்ட மாநில அரசு, பொதுப்பணித் துறை, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலப் பொதுச் செயலாளா் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT